சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையம் ஆகிய இரண்டிலுமே கரோனா காலத்திற்குப் பின்பு பயணிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. கரோனா காலத்திற்கு முன்பு நாள் ஒன்றுக்கு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 40,000 மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் வரை பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உள்நாட்டுப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகள் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன், இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் சென்னைக்கு வந்து செல்கின்றனர். சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் அனைத்துச் சோதனைகளும் முடிந்து விமானங்களில் ஏறச்செல்வதற்கு முன்பாக காத்திருக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உணவு ஸ்டால்களு உள்ளன.
மேலை நாட்டுப்பயணிகள் இந்திய உணவை விரும்பிச் சாப்பிடுவதால் அவர்கள் விமானங்களில் ஏறுவதற்கு முன்னதாக அந்த உணவு ஸ்டால்களில் இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகளை விரும்பி, சாப்பிட்டு விட்டு, அதன் பின்பு விமானப் பயணம் மேற்கொள்கின்றனர். அதேபோல் விமானங்களில் கொடுக்கப்படும் உணவுகளில் விருப்பமில்லாத சிலரும் இங்கு சாப்பிட்டுச் செல்வார்கள்.
இதனால் உணவு ஸ்டால்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சமீப காலமாக இந்த உணவு விடுதி பகுதிகளில் புறாக்களின் கூட்டம் படையெடுத்த வண்ணம் உள்ளது. கூட்டம் கூட்டமாக புறாக்கள் பறந்து வந்து பயணிகள் உணவருந்தும் டேபிள்களில் வந்து அமர்வது, மேலே உள்ள போர்டுகளில் அமர்வது, புறாக்கள் எச்சங்கள் போடுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால் பயணிகள் அருவருப்புடன் முகம் சுளிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பலர் உணவை முழுமையாக சாப்பிடாமல் பாதியிலேயே டேபிளில் வைத்துவிட்டு வெளியேறும் நிலையும் ஏற்படுகிறது. இதைப்போல் கடந்த ஆண்டில் கரோனா வைரஸ் உருமாறி, ஒமைக்ரான் நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியபோது ஒமைக்ரான் வைரஸ் கிருமி பரவுவதற்கு புறாக்களின் எச்சம், ரத்தம் போன்றவைகளும் ஒரு காரணம் என்று இந்திய சுகாதாரத்துறை எச்சரித்தது.
இதையடுத்து அப்போது சென்னை விமான நிலையப் பகுதியில் சுற்றிய புறாக்களை கூண்டுகள் வைத்து பிடித்து வெளியேற்றினர். ஆனால், தற்போது மீண்டும் கரோனா வைரஸ், இன்ஃபுளூயன்சா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் புறாக்கள் அதிகரிப்பானது, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டுக்குப் பயணிக்க வந்த இந்திய பயணி ஒருவர் காட்சியைப் பார்த்து மனம் வெறுத்து, புறாக்கள் டிஃபன் ஸ்டால் டேபிள்களில் சர்வ சாதாரணமாக சுற்றி அழைவதை போட்டோக்கள் எடுத்து இதைப்போன்ற நிலை இருந்தால், வெளிநாட்டவர் நமது நாட்டை என்ன நினைப்பார்கள்? சுத்தம் சுகாதாரம் இல்லை என்று twitter பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் 'உங்களுடைய ஆதங்கத்தை புரிந்து கொண்டோம். சென்னை விமான நிலையத்தில் பறவைகள் கட்டுப்பாடு குழு இருக்கிறது. அதன் மூலம் பறவைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கிறோம். அதோடு மீண்டும் பறவைகள் உள்ளே வராமல் தடுப்பதற்கு வலைகளை அமைக்கவிருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு இடையே முன்பு சர்வதேச நிலையத்தில் மட்டும் அதிகமாக இருந்த புறாக்கள் தற்போது பெருமளவு பரவி உள்நாட்டு நிலையத்திலும் அதிகமாகிவிட்டன. எனவே, சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து புறாக்களைப் பிடித்து அகற்ற வேண்டும் என்று, பயணிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹாங்காங் ராட்ச கப்பலால் நொறுங்கிய குமரி மீனவர்கள் படகு.. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மீனவர்கள் வேதனை!