சென்னை: சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.13) தாக்கல் செய்தார்.
பின்னர் மதியம் சட்டமுன்வடிவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கடந்த 2010ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அதன்மூலம் 435 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. கடந்த ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த சட்டத்திருத்தமும் அட்டவணை 7-இல் 3-வது பிரிவின்கீழ் தான் கொண்டுவரப்பட்டது. தற்போது அதே அட்டவணையின்கீழ் தான் நீட்டிற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை அதிமுக வரவேற்கும். அந்த வகையில் நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை அதிமுக வரவேற்கிறது" என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவுக்கு நன்றி. கடந்த ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை திமுக வரவேற்றது. நீட் தேர்விற்கு எதிராக தற்கொலை செய்துகொண்ட 15 மாணவர்களின் தியாகம் வீண் போகக்கூடாது" என்றார்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் நீட் தேர்வு விலக்கு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?