சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினருடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பசுமைவழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் கூறும்போது, “பல ஆண்டுகளாக தமிழக அரசின் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எங்களது கோரிக்கையை அமைச்சரிடம் தெரிவித்தோம்.
நிதி நிலைமைகளை ஆராய்ந்து உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார், அதன் காரணமாக களத்தில் காத்திருக்கிறோம். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டமும் தொடரும்” எனத் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், இசை, ஒவியம் போன்ற 8 பிரிவுகளில் சுமார் 12 ஆயிரம் பேர் 2012-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர்.
பணி நிரந்தரம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு தொகுப்பூதியத்தில் மட்டும் உயர்வு வழங்கப்பட்டது. பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் மீண்டும் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
12 கல்வியாண்டுகளாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 16,459 பகுதி நேர ஆசிரியர்கள் முறையான நியமனத்தில் மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் வகையில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்தனர்.
12 ஆண்டாக பணி நிரந்தரப்படுத்த பலமுறை கோரிக்கை மற்றும் போராட்டங்கள் மூலம் வலியுறுத்தியும் பணி நிரந்தரப்படுத்தபடாமல் வாழ்வாதாரத்தை இழந்தும் சமுதாயத்தில் மதிப்பிழந்த போதிலும் மாணவர் நலன் கருதி பணியாற்றி வருவதாக தெரிவித்தனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். ஆனால் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கடந்தும் அதனை நிறைவேற்றவில்லை. கடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன், பிஎப், இஎஸ்ஐ போன்றவையும் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் அதுவும் இதுவரையில் வழங்கவில்லை.
பள்ளிக்கு சென்றால் நாங்கள் அமர்வதற்கு கூட இடம் இல்லாத நிலை தான் உள்ளது. ஒருவரை அவர் வாங்கும் சம்பளத்தை வைத்து தான் மதிக்கின்றனர். எங்களுக்கு வாரத்தில் 3 அரை வேலை நாள் தான் பணி அளிக்கின்றனர். எனவே இந்தமுறை பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிடும் வரையில் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.