தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பான எல்கேஜி, 1ஆம் வகுப்பில் 25 விழுக்காடு இடங்களில் மாணவர்கள் சேர்ப்பதற்கு இன்று (ஆகஸ்ட் 27) முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்தனர். மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட முகவரிக்கான அடையாளச் சான்று போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் இணைய தளத்தில் மாணவரின் இருப்பிடம் கூகுள் மேப் மூலம் காட்டப்படுகிறது. மாணவர் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உள்ள தனியார் பள்ளிகளின் விவரம் இணையதளத்தில் காண்பிக்கப்படுகிறது. அந்தப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பத்தில் பள்ளியின் பெயர் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன் பின்னர் விண்ணப்பிப்பதற்கான ரசீது பெற்றோர்களிடம் வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளியில் தங்களது குழந்தையை சேர்க்க வந்த பெற்றோர்களிடம் பேசுகையில், ''அரசுப் பள்ளியில் நன்றாக கற்பித்து வருகின்றனர். ஆனாலும் எங்கள் குழந்தைகளுக்கு மேலும் சிறப்பாக கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் செய்துள்ளோம். அரசு தரப்பில் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தங்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் இடம் கிடைக்கும் என நம்புகிறோம்'' என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'அரியர் மாணவர்களின் அரசனே' - முதலமைச்சருக்கு கட்அவுட் வைத்த அரியரியன்ஸ்!