நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 05.30 மணிக்கு நிறைவுற்றது. இதில் திரை நட்சத்திரப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்நிலையில், பாண்டவர் அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகர் நாசர் கூறியதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மிகப்பெரிய ஜனநாயக கடமையான தேர்தல் மிக நல்லபடியாக முடிந்தது. பல தடைகள் இருந்தது, அதையெல்லாம் கடந்து இந்தத் தேர்தல் நடந்துள்ளது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால், ஏறக்குறைய 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏறக்குறைய 900 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தல் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் அந்த சூழலை உருவாக்கிவிட்டார்கள். உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி.
குளறுபடிகள் எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் எல்லோரையும் எப்போதும் நண்பர்களாக மதிக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலே உங்களுக்கு ஆதரவாகத்தான் முடிந்துள்ளது எனவும், நீதிபதி பத்மநாபன் உங்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்தாவது:
ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறக்கூடாது. பலத்த பாதுகாப்பின் மத்தியில் நல்ல முறையில் தேர்தல் நடந்துள்ளது. இதற்காக தேர்தல் அலுவலர் பத்மநாபன், ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் என அனைவருக்கும் நன்றி. நாங்கள் நீதிமன்றத்தைக் கடவுளாக மதிக்கிறோம்.
சங்கத்திற்கு தேர்தலை நடத்தலாம் என்று இருக்கும்போது நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக நீதியரசர்களை நியமித்து தேர்தலை நடத்தி இருக்கிறோம். இந்தத் தேர்தல் எங்களுக்காக அல்ல, சங்கத்திற்காக. தேர்தல் முடிந்தால்தான் அதிகாரப்பூர்வமாக அடுத்த நிர்வாகம் பதவி ஏற்க முடியும். அப்போதுதான் அடுத்தக்கட்ட வேலைகள் நடக்கும். கட்டடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்” என்றார்.
இதையடுத்து பூச்சி முருகன் கூறுகையில், குளறுபடி என அவர்கள் கூறுவது இரண்டு நாட்களாக தேர்தல் நிறுத்த அவர்கள் செய்ததைத் தான் கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.