வில்லிவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 ஊராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 2ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி நிறைவுபெற்றது. இந்நிலையில், வில்லிவாக்கம் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சை சின்னத்தில் அனிதா மேகநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவரது பதியேற்பு விழா ஆலத்தூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் அலுவலர் விஜயலட்சுமி முன்னிலையில் அனிதா மேகநாதன் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு, அனிதா மேகநாதன் மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் பேசிய அவர், ‘எனது பஞ்சாயத்தில் ரேஷன் கடை, பேருந்து வசதி, சமுதாயக்கூடம், விளையாட்டுத்திடல், இ-சேவை மையம் உள்ளிட்டவற்றை கொண்டு வர முயற்சி செய்வேன்’ என்றார்.
பதவியேற்ற அன்றே பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய ஊராட்சித் தலைவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுயேச்சை வேட்பாளரை கடத்திய திமுகவினர் - காவல் துறையினர் விசாரணை