சென்னை: திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “பெண் ஐ.பி.எஸ்., அலுவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த குற்றச்சாட்டிற்குள்ளான ராஜேஷ் தாஸ் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. குற்றம்சுமத்தப்பட்டவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவரை தமிழ்நாடு அரசு பணி நீக்கமோ, பணி இடைநீக்கமோ செய்யவில்லை.
பதவி, அதிகாரத்தை கையில் வைத்திருக்கக்கூடிய ஒருவர் மீது விசாரணை குழுவிடம் சாட்சியம் சொல்ல வருபவர்களை தடுப்பார்கள். அதேபோல், சாட்சி சொல்ல வந்தவர்களை எஸ்.பி., கண்ணன் தடுத்து நிறுத்தியுள்ளார். இவர் பதவியில் இருக்கின்ற காரணத்தினால் விசாரணை நியாயமாக நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் குற்றம் சுமத்தப்பட்ட இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். மேலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு ஐ.பி.எஸ் அலுவலருக்கே இந்த நிலைமை என்றால் அவருக்குக் கீழே பணி செய்கின்ற பெண் அலுவலர்களுக்கு அவர் எவ்வளவு நெருக்கடிகளைக் கொடுத்திருப்பார். அவர்களது நிலைமை என்ன? அவர்கள் எவ்வளவு பாதிப்பு பாதிக்கப்பட்டிருப்பார்கள்? அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டிருக்கும் தானே. திமுக ஆட்சி வந்தவுடன் இதற்கென்று தனி விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை புரியும் சமூக விரோதிகளை காப்பாற்றும் நோக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாடு வெற்றி நடை போட வில்லை வெற்றுநடை தான் போடுகிறது” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அதிமுக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க : தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை; அமித் ஷா - முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு