சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட்- 2023 தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரானது, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 10 நாடுகள் பங்கேற்றுள்ளது. அந்த வகையில் உலகக் கோப்பை 2023-ன் 22-வது லீக் ஆட்டம் இன்று (அக் 23) சென்னையில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடுகிறது. பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை கான தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, காஷ்மீர்,கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் மேலும் சிங்கப்பூரில் இருந்தும் ரசிகர்கள் சென்னை வந்துள்ளனர்.
இந்த ஆட்டத்தைக் குறித்து காஷ்மீரில் இருந்து வந்த ரசிகர்கள் சிலர் கூறுகையில், "ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணியைக் காண்பதற்காக, நாங்கள் காஷ்மீரில் இருந்து வந்துள்ளோம். மேலும் இந்த ஆட்டம் என்பது எங்களுக்கு உணர்வோடு கலந்துள்ளது.
பாகிஸ்தான் அணியில், பாபர் சிறப்பாக விளையாடக் கூடியவர் அதேபோல், ஆப்கானிஸ்தான் அணியில், ரஷீத் கானும் சிறப்பாக விளையாடக் கூடியவர். மேலும் இரு அணிகளும் சமமாக அவர் அவர் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இந்த போட்டியில் நிச்சியமாகப் பாகிஸ்தான் வெல்லும்" என்று தெரிவித்தனர்.
மேலும் கேரளாவில் இருந்த வந்த ரசிகர் ஒருவர் கூறுகையில், "நான் பாபரின் தீவிரமான ரசிகர் அதனால் நான் இந்த ஆட்டத்தைப் பார்க்க இங்கு வந்துள்ளேன், மேலும் பாகிஸ்தான் இம்முறை சிறப்பாக விளையாடும்" என்று தெரிவித்தார்.
இந்த போட்டி குறித்து தஞ்சாவூரில் இருந்து வந்த செல்வகுமார் கூறுகையில், "பாகிஸ்தான் டீம் ஸ்ப்ரீட் உடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. நிச்சியமாகப் பாகிஸ்தான் அணி வெல்லும், மேலும் பாகிஸ்தான் அணியானது, நிச்சியம் அரையிறுதி வரை செல்லும்" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் விவகாரம் குறித்து கேட்டபோது, "அது மிகவும் தவறான செயல், விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும். விளையாட்டு என்பது பொதுவான ஒன்று. விளையாட்டில் சிறப்பான அணியைக் கொண்டாடுவது ஆரோக்கியமான ஆட்டம் ஆகும். மேலும் தென்னிந்தியாவில், பாகிஸ்தானுக்குத் தனி மரியாதை உண்டு. அதனால், இங்கு அனைவரும், பாகிஸ்தான் அணிக்குத் துணை நிற்பார்கள்" என தெரிவித்தார்.
விருதுநகரைச் சேர்ந்த அருண் குமார் கூறுகையில், "ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறார்கள், மேலும் சென்னை மைதானத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். இந்த போட்டி சற்று இரு அணிகளுக்குக் கடினமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
சென்னையை திருவேலிக்கேணி பகுதியைச் சேர்ந்த ராமானுஜம் கூறுகையில், "பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடுகிறது, மேலும் பாகிஸ்தான் அணி வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் தங்களின் உத்வேக ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நிச்சியமாகப் பாகிஸ்தான் அணி வெல்லும்" என அவர் தெரிவித்தார்.
இந்த போட்டியைக் காண சிங்கப்பூரில் இருந்து வருகை தந்துள்ள பிரதீப் கூறுகையில், "ஆப்கானிஸ்தான் அணி ஒரு சிறந்த அணி நிச்சியமாக இந்த ஆட்டம் அவர்கள் கையில் தான் உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: Pakistan Vs Afghanistan : பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!