கல்லூரி திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகரப்பேருந்தின் கூரை மீது பயணம் செய்தனர். இந்த 'பஸ்டே' கொண்டாட்டத்தின்போது பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்திருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென கொத்துக் கொத்தாக கீழே சரிந்து விழும் காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதுதொடர்பாக காவல் துறையினர் மாணவர்களை கைது செய்து பிணையில் விடுவித்தனர்.
இந்நிலையில், பேருந்து கூரை மீது பயணம் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மனோதத்துவ நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் பொறுப்பில் உள்ள அருள் மொழிச்செல்வன் தெரிவித்துள்ளார்.