சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். இந்தப் பரவலைத் தடுக்க கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இருப்பினும் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில் உள்ள 15 மண்டலங்களை ஒருவருக்கு மூன்று மண்டலம் என, ஐந்து அமைச்சர்கள் கொண்ட சிறப்புக் குழுவை முதலமைச்சர் அமைத்தார். அதன்படி, வருவாய் துறை அமைச்சர் ஆர் பி. உதயகுமார் (மண்டலம் 1,2,6), மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் (மண்டலம் 3,4,5) போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் (மண்டலம் 7, 11 ,12) உணவுத்துறை அமைச்சர் காமராஜ் (மண்டலம் 8, 9, 10) உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் (மண்டலம் 13 14 15) என, 15 மண்டலங்களுக்கும் 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கரோனா தடுப்புப் பணிகளை பற்றி விரிவாக ஆலோசிக்க இன்று(ஜூன்.8) ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சென்னையிலுள்ள அம்மா மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, ஒட்டுமொத்த சென்னையிலும் கரோனோ பாதிப்பு கிடையாது. சென்னையில் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 6 ஆயிரத்து 537 தெருக்களில் தான் உள்ளனர். அதாவது, 16 விழுக்காடு தெருக்களில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் இந்த தெருக்கள் 200 வார்டுகளிலும் இருக்கலாம் என்றார்.
இதையும் படிங்க: குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக வாட்ஸ்ஆப்பில் பதிவு : ராஜஸ்தான் டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்கு!