சென்னை: மாநிலப் பாடத்திட்டத்தில் 2020-21ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று (அக்.4) வழங்கப்படும் எனத் தமிழ்நாடு தேர்வுத் துறை அறிவித்தது.
அதன்படி இன்று மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது. சான்றிதழ்களைப் பெறக்கூடிய மாணவர்கள், அதே பள்ளியில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தாண்டு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் ஏதும் குறிப்பிடாமல் அனைத்துப் பாடங்களிலும் 'தேர்ச்சி' எனக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சென்னையில் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் நேரில் பார்வையிட்டார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு பதிவு ஆன்லைனில் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின!