சென்னை : தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில், அனைத்துத் தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1 முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன், கரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பள்ளிகள் திறக்க உத்தேசம் இருப்பதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித் துறை அலுவலர்கள் தீவிரமாக மேற்கொள்கின்றனர்.
தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவு
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை, விவரங்களை அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், பள்ளி வளாகத்தின் நிலைமை, ஆசிரியர்கள் இரண்டு தடுப்பூசிகளும் போட்டு இருக்கின்றனரா, மாணவர்கள் விவரங்கள், பள்ளி வளாகம் தூய்மையாக இருக்கிறதா என்பது உள்பட பல்வேறு விவரங்களை அனுப்புவதற்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளைத் தொடர்பு கொண்டு கிருமி நாசினி மருந்து தெளித்தல், தேவையற்ற முட்புதர்களை அகற்றுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?