சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்று அவரை சந்தித்த நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படம் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது.
அதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமைய மலை பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் கோயில்களுக்கு சென்றது, மத குருக்களை சந்தித்தது என பல வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இமயமலையில் இருந்து திரும்பும் போது, சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தன்னுடைய நெருங்கிய நண்பன் என பலரையும் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
குறிப்பாக அவர் உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும் போது, அவருடைய காலில் விழுந்தது தமிழக மக்கள் மத்தியிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் குறிப்பாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. அதற்கான விளக்கத்தையும் நடிகர் ரஜினிகாந்த் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஆன்மீக இமயமலை சென்று, தமிழகம் திரும்பி இருக்கும் நடிகர் ரஜினிக்கு, 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்திற்கு விலை உயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கினார்.
இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்தை நேரடியாக சென்று சந்தித்திருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த சந்திப்பானது, மரியாதை நிமிர்த்தம் எனக் கூறப்பட்டாலும், இதற்கு பின்னால் அரசியல் இருக்கலாம் என பேசப்பட்டு வரும் நிலையுள்ளது.
காஞ்சிபுரத்தில் நாளை (செப்.03) ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக 'புரட்சி பயணம்' மேற்கொள்ள இருக்கிறார். ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து, பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில், ரஜினிகாந்தை இந்த கூட்டணிக்கு வாய்ஸ் கொடுக்க வைக்கலாம் எனவும், இந்த சந்திப்பு அது தொடர்பான சந்திப்பாக இருக்கலாம் எனவும், அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரஜினிகாந்தும், ஓ.பன்னீர்செல்வமும் பேசியதாக கூறப்படுகிறது. 'தான் அரசியலுக்கு வருவேன்' என பல ஆண்டுகளாக கூறிக் கொண்டு வந்த ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்து, பின் அரசியலுக்கு வரவதில்லை என கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் அரசியலில் ஈடுபட உள்ளாரா? என்ற கேள்வியை ஓபிஎஸ் உடனான சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: One Nation One Election: ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை வரவேற்கிறோம்’ - ஓபிஎஸ்