சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் புயலைக் கிளப்பி இறுதியாக பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இரண்டாகப் பிளவு பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன.
இரண்டு பேரில் யார் அதிமுக என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான வழக்கும் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அணியினர் பல மாவட்டங்களில் திமுகவின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணமும் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்விற்கும் சென்றுகொண்டு வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டு பத்து நாள் ஓய்வுக்குப்பின்பு, மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் உணவக விடுதியில் சேலம் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:”ஜெய்ஹிந்த் ” என முழங்கிய செயல் வீரர் செண்பகராமன்