சென்னை: இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின்படி நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சில பகுதிகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும், பேருந்துகளில் அந்த இழப்பை ஈடு செய்ய ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் 5 ரூபாய் என்பதுதான் குறைந்தபட்ச கட்டணமாக இருந்தது. சட்டத்திற்கு புறம்பாக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தவறு சீர்செய்யப்படும் என்று பதில் அளித்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடு செய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய யுக்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடைபிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசாங்கத்திற்கு, ஆட்சியாளர்களுக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு மகளிருக்கான இலவசப் பயணத்தால் ஏற்படும் இழப்பு ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா: அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நெசவுத் தொழில்