சென்னை: கடந்தாண்டு ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் எனவும், தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.
பின்னர், ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் 7 நாட்கள் இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ஜூன் 28-ஆம் தேதியன்று தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஆகஸ்ட் 25-ஆம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்குத் தடை விதிக்க முடியாது. தீர்மானங்களுக்குத் தடை விதிப்பதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களைக் கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானங்களுக்கும் தடை விதிக்க முடியாது. எனக்கூறிய நீதிபதிகள், அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மேலும் ஒரு அடி முன்னோக்கிச் சென்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, " உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி என்று கூறியதோடு 2024 மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
தேனி பெரியகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு குறித்து தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
நீதிமன்ற தீர்ப்புகளில் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று வருவதால் அவரது ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைக் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை வரும் நாடாளுமன்றத் தேர்தல் தான் முடிவு செய்யும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த சட்ட போராட்டம் - ஓபிஸின் அரசியல் பயணம் முடிந்ததா?