சென்னை: தமிழகத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு ராஜா முத்தையா மருத்துவ கல்லாரியில் படித்த முதலாமாண்டு மருத்துவ மாணவன் பொன் நாவரசு, விடுதியில் சக மாணவர்களால் துன்புறத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர், உடல்களை பல்வேறு துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசியுள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு, ராகிங் கொடுமைகளை தடுக்க இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1997ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி கொண்டுவரப்பட்ட "தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின்" படி நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்து கொள்வது, அச்சுறுத்துவது, உடல்ரீதியாக துன்புறுத்துவது, விருப்பமில்லாத சில செயல்களை செய்ய தூண்டுவது உள்ளிட்டவை அடங்கும்.
கல்வி நிறுவனங்களின் உள்ளேயும் வெளியேயும் கிண்டல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ராகிங் செய்தது நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம். பிரிவு 4-ன் படி ராகிங் செய்து ஒருவர் தண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார். வேறு எந்த நிறுவனத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்.
ராகிங் தொடர்பாக புகார்கள் வந்தால், உடனே சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவரை கல்லூரியில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். ராகிங் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முடிவே இறுதியானது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க தவறினால், கல்வி நிறுவனமும் துணை போனதாக கருதி தண்டனை விதிக்கலாம் என சட்டம் கூறுகிறது.
ஆனால், 1997ஆம் ஆண்டு முதல் 2023 வரை இத்தனை ஆண்டுகளில் ஏன் கல்வி நிறுவனங்களில் ராகிங் கொடுமைகளை தடுக்க முடியவில்லை. சட்டங்கள் வலுவானதாக இல்லையா? அல்லது முழுமையாக அமல்படுத்தப்படவில்லையா? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது. ராகிங் சம்பவங்கள் அவ்வபோது தமிழகத்தில் அரங்கேறினாலும், தண்டனைகள் என்பது அரிதாகவே வழங்கப்பட்டுள்ளது.
ராகிங் சிறப்பு சட்டம் இருந்தும் ஏன் மாணாக்கர்களுக்கு கொடுமைகள் தொடர்கிறது. தடுப்பதற்கு நிரந்தர வழி என்ன? என முன்னாள் அரசு வழக்கறிஞர் கெளரி அசோகன் தரும் விளக்கத்தை பார்க்கலாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'ராகிங் என்பது புதிய மாணவர்களை அச்சுறுத்தாமல் தங்களை அறிமுகப்படுத்த செய்வதாக இருக்க வேண்டும். யாரையும் மனதளவிலோ? உடலளவிலோ? பாதிப்பதாக இருக்கக்கூடாது. அவ்வாறு பாதிக்கப்பட்டால் கட்டாயம் தண்டனை விதிக்க வேண்டும்.
ராகிங் சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த நிலையிலும் போதிய விழிப்புணர்வு இல்லாததே இன்றும் ராகிங் தொடர காரணமாக உள்ளது. ராகிங் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் எப்.ஐ.ஆர் பதிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீண்ட காலம் ஆகிறது. அதனால், சாட்சிகள் பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டு தண்டனை கிடைக்க நீண்ட காலம் ஏற்படுகிறது. காலதாமதத்தை தவிர்க்க வழக்கு பதிவு செய்ததும், விசாரணை தொடங்கி விரைந்து முடித்தால் விழிப்புணர்வு ஏற்படலாம்' என தெரிவித்தார்.
தொடர்ந்து அரங்கேறி வரும் ராகிங் கொடுமை குறித்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதிலெட்சுமி, 'ராகிங் தொடர்பான புகார்கள் பெரும்பாலும் கல்லூரி நிர்வாகத்தால் முதலில் விசாரிக்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எந்த பாதிப்பும் இல்லாத நிலையில், சமரசமாக இனிமேல் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என பேசி தீர்க்கப்படும்.
உடல்ரீதியான துன்புறுத்தல்கள் இருந்தால், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ராகிங் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் முதலில் கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கமும், விசாரணையில் ராகிங் செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
கல்வி நிறுவனங்களில் பாதியில் படிப்பை நிறுத்துவதால், படிப்பை முடிக்க வழியில்லாமல், எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். அதனால், மாணவர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது' என கூறியுள்ளார்.
சக மாணவர்களை கேலிப்பொருளாக அல்லாமல் நண்பணாகவோ? மாணவனாகவோ? பார்க்காத வரை கல்வி நிலையங்களில் ராகிங் தொடரவே செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.
இதையும் படிங்க: கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க நடவடிக்கை: கல்லூரிக் கல்வி இயக்குனர் முதல்வர்களுக்கு அறிவுறுத்தல்!