சென்னை: தமிழ்நாடு காவல் துறையினர் 'ஆப்ரேஷன் புது வாழ்வு' என்கிற திட்டத்தை கடந்த மூன்றாம் தேதி தொடங்கினர். இதில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலை ஓரங்களில் ஆதரவு இன்றி இருக்கும் 1800 பிச்சைக்காரர்களை மீட்டனர். இதில் 255 பேர் அரசு இல்லங்களிலும், 953 பேர் அரசு சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் ஒப்படைக்கப்பட்டனர்.
அநாதை இல்லங்களில் 367 பேர் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 27 சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 198 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு பெற்றோரின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நேற்று (டிச.4) நடந்த ’ஆப்ரேசன் புதுவாழ்வு’ வேட்டையில் அதிகபட்சமாக தாம்பரம் பெருநகர காவல் துறையினர் 207 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 190 பேரும், ரயில்வே காவல் துறையில் 139 பேரும் மற்றும் சேலம் மாவட்ட காவல் துறையினர் 122 பேரையும் பிடித்து தக்க நடவடிக்கை எடுத்தனர்.
குழந்தைகளை பிச்கைக்காரர்களாக்கி அவர்களை நகர்ப்புறங்களில் பிச்சை எடுக்க வைக்கும் ஆட்கடத்தல் கும்பல் பற்றிய தகவல் அளிக்க தொலைபேசி 044 28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. தகவல் தருபவர்களுக்குத் தகுந்த வெகுமதி வழங்கப்படும் எனவும், அவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாட்டில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு