சென்னை: தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைக்கே ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதா, கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மசோதா தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதிலளித்தது. அதன் பின்னர் மசோதா கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால், உடனடியாக ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நான்கு மாதங்களுக்குப் பிறகு கடந்த 8ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்று ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தின் முதல் நாளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அரசு அளித்த விளக்கங்களையும் பேரவையில் விரிவாக முதலமைச்சர் விளக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா கிடப்பில் போடப்பட்டிருந்த நான்கு மாதங்களில் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த டிசம்பர் மாதம் திண்டுக்கல்லில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பட்டதாரி இளைஞர், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம், திருநெல்வேலியில் சொத்தை விற்று ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல் ஜனவரி மாதத்தில் தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்