ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்த தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமும் புதிதாக வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேம்ஸ்கிராப்ட் தரப்பில் வெளியில் சென்று ரம்மி விளையாடுவதைவிட, ஆன்லைனில் விளையாடுவது பாதுகாப்பானது. ரம்மி என்பது விளையாட்டு மட்டுமல்ல, திறமையை வளர்க்கக்கூடியது. கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது தொடர்பாக குதிரை பந்தய வழக்குகளில் முன்னுதாரணங்கள் உள்ளதால் வழக்கு முடியும்வரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்குப் பதிலளிக்கவும், இறுதி வாதங்களை வைப்பதற்கும் மேலும் அவகாசம் வேண்டுமென தமிழ்நாடு அரசுத் தரப்பில், கோரிக்கைவைக்கப்பட்டது.
மேலும், குதிரை பந்தயமும், ரம்மியும் ஒன்றாக கருத முடியாது. பெற்றோர்களின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பிள்ளைகள் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதாகவும் குற்றம்சாட்டினர். அவசர சட்டத்துக்குப் பதிலாக ஜனவரி முதல் வாரத்தில் சட்டம் இயற்றப்படும் என்பதால் அதன்பின்னர் பதிலளித்து, இறுதி வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குதிரை பந்தயத்தில் கலந்துகொள்வதும், உட்கார்ந்த இடத்திலேயே ரம்மி விளையாடுவதையும் ஒன்றாக கருத முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி, இறுதி விசாரணையை ஜனவரி 18ஆம் தேதி தள்ளிவைத்தனர்.
முன்னதாக, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மூலம் இளைஞர்கள் தங்களது பணத்தை இழப்பதுடன், கடனைத் திருப்பித் தர இயலாமல் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவந்தது. இதனால், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யுமாறு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யும் அவசரச் சட்டத்தை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
இதையும் படிங்க: அரசு தடை உத்தரவால் முடிவுக்கு வருமா ஆன்லைன் சூதாட்டம்?