இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்தாண்டு தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 15ஆம் தேதி மாலை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 55 ஆயிரத்து 995 மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் 36 ஆயிரத்து 962 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தொலைபேசி மூலமும் இமெயில் மூலமும் 2290 மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டுள்ளனர்.
இவர்களுக்கான இணையதள பதிவு முடிந்தவுடன் ரேண்டம் நம்பர் (Random number) வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு இணையதளம் வாயிலாக நடைபெறும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டாம் நம்பர் அவர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மாணவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
கரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வும் வீட்டிலிருந்தபடியே, இணையதளம் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பி.இ ,பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, பகுதி நேர பி.இ, பி.டெக் மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வும் இணையதளம் வாயிலாகவே நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்யும் தேதி, இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.