சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாடு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மற்றும் கோவையில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் தவறான செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக ட்விட்டர் மூலம் வதந்தி பரப்பியதாக, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தித்தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தூத்துக்குடியில் பதிவான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் பெற்ற உம்ராவ், திருப்பூரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமது ட்விட்டர் கணக்கை முடக்கி, இந்த தகவல் பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கும், தனக்கு தொடர்பு இல்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உம்ராவ் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, ஜாமீன் கோரிய உம்ராவ் மனு மீதான விசாரணையை மார்ச் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடிய வழக்கில் பெண் பணியாளர் மற்றும் கார் ஓட்டுநர் கைது