சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஏஞ்சல் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர் தியாகப் பிரகாசம் (43). இவர் குறிப்பாக www.aangeltrading.com என்ற வலைதளம் மூலம் 100 நாட்களில் அளித்த பணம் இரட்டிப்பாக்கி திருப்பி அளிக்கப்படும் என்ற விளம்பத்தை வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்துள்ளார்.
மேலும், இணையதளத்தில் பதிவு செய்யும் நபர்கள் எம்.எல்.எம் முறையில் கூடுதலாக ஆள் சேர்த்தால் கமிஷனாக ஒரு தொகை தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் கோடிக் கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர்.
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம்
ஆனால், தியாகப் பிரகாசம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நிறுவனத்தை மூடிவிட்டுக் கடந்த 2019ஆம் ஆண்டு தலைமறைவாகியுள்ளார்.
இதையறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மீண்டும் தூசி தட்டிய போலீஸ்
முன்னதாக சுமார் இவர் மீது சுமார் 46 பேர் அளித்த புகார்களின் அடிப்படையில், தியாகப் பிரகாசம் 1.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவ்வழக்கானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், நாளடைவில் இவ்வழக்கு கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர், பணத்தை இழந்தவர்கள் விசாரணையைத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மீண்டும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் களத்தில் இறங்கினர்.
செல்போன் எண் ட்ரேக்
இந்நிறுவனம் தொடர்புடைய அனைத்து எண்களும் பயன்பாட்டில் இல்லாத நிலையில், ஒரே ஒரு எண் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்ததை காவல் துறையினர் கண்டறிந்தனர். அந்த எண்ணை ட்ராக் செய்து சம்மந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் தான் தியாகப் பிரகாசத்தின் வாடிக்கையாளர் என்பதும், தியாகப் பிரகாசம் ஆந்திர சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று குண்டூரில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளதும் தெரியவந்தது.
மேலும், அந்நபர் அளித்த தகவலின்பேரில், சென்னை, கோட்டூர்புரம் பாரதி அவென்யூவில் தலைமறைவாக இருந்த தியாகப் பிரகாசத்தை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
100 கோடி ரூபாய் மோசடி
இந்நிலையில், தியாகப் பிரகாசத்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வலைதளம் வாயிலாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 100 கோடியை பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தியாகப் பிரகாசத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
இதுவரை பெறப்பட்ட 46 புகார்களுக்கான தொகை மட்டுமே 1.5 கோடி ரூபாய் எனும் நிலையில், வாக்குமூலத்தின்படி இன்னும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் தியாகப் பிரகாசத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடனைத் திருப்பித் தராத நண்பனை உயிருடன் புதைக்க முயற்சி: மூவர் கைது