நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருள்களை வாங்கிக் கொள்ளும் வகையில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்காக பொது விநியோக முறைக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை கட்டமைப்பை மத்திய நுகர்வோர் விவகாரத்துறை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநிலங்கள் இணைந்துள்ளன.
தமிழ்நாட்டில் 2 கோடியே 9 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தத் திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 32 மாவட்டங்களில் இந்தத் திட்டம் இன்று ( அக்டோபர் 1) அமலுக்கு வருகிறது. இதனை தலைமைச் செயலகத்திலிருந்தபடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.
இதன்மூலம், ஸ்மார்ட் ரேஷன் அட்டை வைத்துள்ள யாரும், தமிழ்நாட்டில் எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்டப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும். இடம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த பயனளிக்கும். இந்தத் திட்டத்தின் மூலம், ஒருவர் வேறு மாநிலங்களில் ரேஷன் கார்டுகளை வைத்திருக்க முடியாது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களைத் தவிர, மற்ற யாரும் ரேஷன் பொருள்களை வாங்க முடியாது என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் திட்டத்துக்காக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கூடுதலாக 5 விழுக்காடு பொருட்களை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கப்பலில் வேலை, எங்களுக்கு அமைச்சரை தெரியும் - ஏமாற்றமடைந்த பட்டதாரிகள்!