சென்னை: கடந்த 18ஆம் தேதி சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (36) என்பவர், நிதி நிறுவன அலுவலகத்திற்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அமைந்தகரை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்றபோது, பின் தொடர்ந்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆறுமுகத்தை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக அமைந்தகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஆறு பேர் கொண்ட கும்பலை தனிப்படை அமைத்துத்தேடி வந்தனர். மேலும், உயிரிழந்த ஆறுமுகம் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று (மே 21) ஆறுமுகத்தை கொலை செய்ததாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சென்னை செனாய் நகரைச்சேர்ந்த ரோஹித் ராஜ் (31) மற்றும் சந்திரசேகர் (28) ஆகிய இருவர் சரணடைந்தனர். சரணடைந்த இருவரையும் 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் தலைமறைவாகவுள்ள நான்கு பேரைப் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆறுமுகத்தை ஓட ஓட வெட்டிக்கொலை செய்த பாடிகுப்பத்தைச்சேர்ந்த கிஷோர் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஏற்கெனவே இந்த கொலை வழக்கில் இருவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணைடைந்த நிலையில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கொரியர் டெலிவரி செய்ய இருந்த பையை அலேக்காக தூக்கி சென்ற திருடர்கள் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி!