சென்னை: உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் 'இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம்' சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் அறம், கலி.பூங்குன்றன், எம்.பொன்ன வைக்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், "இந்தியா பல்வேறு மொழிகள் பேசக்கூடிய நாடாகும். அண்மைக்காலமாக மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கி வருகிறது. சமஸ்கிருதத்தை வளர்த்தெடுக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறது. தமிழ் மொழி உள்ளிட்ட மற்ற செம்மொழிகளுக்கு நிதியை மிக குறைவாக ஒதுக்குகிறது.
மத்திய அரசு, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அலுவல் மொழி குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவை அமைத்தது. அந்த குழுவின் அறிக்கையில் இந்தியை முதன்மைப்படுத்தும் நோக்கத்துடன், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை தினிக்கும் நோக்கத்துடன் பல பரிந்துரைகளை அளித்துள்ளது. அந்த பரிந்துரையானது மத்திய கல்வி நிறுவனங்களின், பயிற்று மொழியாக, இந்தியை மாற்றுவதற்கு வழி செய்கிறது. மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என நிலையை உருவாக்குகிறது. இவை அனைத்தும் புறக்கணிக்க இந்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை கடந்த பத்து ஆண்டுகளாக திணித்துதான் வருகின்றனர். எதிர்கால தலைமுறை மீதும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் நிலைதான் உள்ளது.
இந்தியாவில் 3,000 மொழிகள் பேசப்படுகின்றன. அதுமட்டுமின்றி எழுத்து இயக்கம் இல்லாத மொழிகள் 1,000 உள்ளன. ஜனநாயகம் என்பது ஒரு கருத்தியல்தான். ஜனநாயகத்தின் நோக்கம் ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டலை எதிர்ப்பதுதான். இன்றைய தலைமுறையில் எட்டு கோடி பேர் தமிழ் மொழியை பேசுகின்றனர். தமிழ் மொழி அல்ல, ஜனநாயகம்தான் நம்முடைய அடையாளம். ஆட்சி அதிகாரம் இருக்கிறது எனும் ஒரே காரணத்தினால் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் மொழியினை திணிப்பது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது" என்று கூறினார்.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தகவல் தொழில்நுட்பத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் மொழித்திணிப்பை நடத்துகின்றன என்றும், ஒரே மொழி ஒரே கலாச்சாரம் எனும் அவர்களது திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன - அதை விடுதலை சிருத்தைகள் கட்சி கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி