சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குப்பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் விமானப் பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் கண்காணித்தனர். அதில் வந்த தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டைச்சேர்ந்த பிரான்சிஸ் ஜோசல் டோரஸ்(26) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறியுள்ளார். மேலும் அவரிடம் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்தபோது முரணாகப் பேசினார்
இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் விலையுர்ந்த போதைப்பவுடர் மறைத்து வைத்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். ரூ.11 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 218 கிராம் கோக்கைன் போதைப்பவுடரை பறிமுதல் செய்தனர்.
இவற்றைக் கடத்தி வந்த வெனிசுலா நாட்டுப்பெண்ணை கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள் யாருக்காக கடத்தி வந்தார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்குத்தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார் என விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கோக்கைன் பொருள் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:75 -ஆவது சுதந்திர தினவிழா: இளைஞரின் கண்ணில் தேசியக்கொடி