இந்தாண்டிற்கான எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து முதுகலைப் படிப்பிற்கான தேர்விற்கு மே 5ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கடந்த 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தனியாகவும், தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு தனியாகவும், நுழைவுத் தேர்வினை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு ஒரே நுழைவுத் தேர்வினை எழுதுவதற்குரிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் முதுகலைப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு ஏற்கனவே நடைபெற்ற முறைகளின்படி அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இதுகுறித்து உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா 29ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறபட்டுள்ளதாவது, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு எழுதுவது கட்டாயமாகும். அதனடிப்படையில் முதுகலைப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செயல்படுவார். உறுப்பினர்களாக தொழில்நுட்ப கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி பாடத் திட்ட மையத்தின் இயக்குநர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மையத்தின் இயக்குநர், அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை மையத்தின் துணை இயக்குனர் ஆகியோர் செயல்படுவார்கள்.
இந்தக் குழுவில் உறுப்பினர் செயலாளராக அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மையத்தின் இயக்குனர் ஈஸ்வரகுமார் செயல்படுவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடத்துவதற்கும், சேர்க்கை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு உள்ளது.