சென்னை: அபுதாபியில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதனையிட்டனர். அவருடைய சூட்கேசுக்குள், கார்களை கழுவும் (கார் வாஷ்) மிஷின் ஒன்று இருந்தது. அதிகாரிகள் சந்தேகத்தில்,அந்த மிஷினை கற்றி பார்த்தனர்.
அதனுள் ஒன்பது வெள்ளி நிறத்தில் உருண்டைகள் இருந்தன. சந்தேகத்தில் உருண்டைகளை எடுத்து ஆய்வு செய்ததில், அவைகள் தங்க உருண்டைகள் என தெரியவந்தன. மேலும், தங்கத்தை மறைப்பதற்காக வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஒன்பது தங்க உருண்டைகளின் மொத்த எடை 2.42 கிலோ என கூறப்படுகிறது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.05 கோடி எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்க உருண்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சென்னை பயணியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: சமூக வலைதள கருத்து மோதல் - இளைஞர் கத்தியால் குத்தி கொலை