சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வல்லரசு(20). இவர் மீது தலைமை செயலக காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இந்த சூழலில் இவரது எதிர் கோஷ்டியினர் வல்லரசுவை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் அவர் மாதவரம் ரவுண்டானா அருகே குடியேறியுள்ளார்.
இந்நிலையில் ரவுடி வல்லரசு ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார் என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரவுடி வல்லரசுவை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இதற்கிடையே இன்று அதிகாலை வியாசர்பாடி காவல் உதவி ஆய்வாளர் பவுன்ராஜை, கதிர் என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கையில் கத்தியுடன் வல்லரசு சுற்றி திரிவதாக தகவல் அளித்தார்.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், பவுன்ராஜ் ஆகியோர் வல்லரசு தங்கியிருந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது வல்லரசு காவல்துறையினரை தாக்கியுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் பவுன்ராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் தற்காப்புக்காக ரவுடி வல்லரசுவை காவல் ஆய்வாளர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ரவுடி வல்லரசுவின் உடல் ஸ்டான்லி அரசு மடுத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் காவல்துறை உதவி ஆய்வாளர் பவுன் ராஜும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.