சென்னை, எம்ஜிஆர் நகர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி கஸ்தூரி. இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கே.கே.நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இச்சூழ்நிலையில் ”கரோனா தொற்றால் உயிரிழந்து விடுவோமா” எனும் அச்சம் அதிகரித்து, நெய்வேலியில் உள்ள தனது மகனை இறுதியாகக் காண விரும்பிய அவர், நேற்று (ஆக. 8) இரவு மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மூதாட்டி குறித்து புகார் அளிக்கப்பட்டு அவரை காவல் துறையினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் மூதாட்டி கொடுத்திருந்த எண்ணை காவல் துறையினர் தொடர்பு கொண்டபோது அந்த அழைப்பில் பேசிய மூதாட்டியின் மகன், தன்னைப் பார்க்க தனது தாய் சென்னையிலிருந்து நெய்வேலிக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தாய் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் செல்போனில் இருந்து இந்தத் தகவலை சொன்னதாகவும் கூறிய அவர், அந்த ஆட்டோ ஓட்டுநரின் எண்ணையும் கொடுத்துள்ளார். தொடர்ந்து இது குறித்த தகவலை ஆட்டோ ஓட்டுநரிடம் தெரிவித்த காவல் துறையினர், திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் பேசி சமாதானம் செய்து, மீண்டும் சென்னைக்கு அவரை அழைத்து வந்தனர்.
மேலும், எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதி அருகே சென்றபோது மீண்டும் தப்பியோட முயற்சித்த மூதாட்டியைப் பிடித்து, ”தங்களுக்கு ஒன்றும் நேராது. மருத்துவமனையில் தங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து தருகிறோம்” என அன்பாகப் பேசி அந்த மூதாட்டியை அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
கரோனா தொற்று உறுதியான மூதாட்டியை மீண்டும் காவல் துறையினர் சமாதானம் செய்து அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்த இந்த சம்பவம் பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 5,000-ஐ நெருங்கும் உயிரிழப்பு