தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றிய அன்னபூரணி, கடந்த 2012ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக தன்னை பணியிடை நீக்கம் செய்து வைத்திருப்பது நியாயமற்றது என்பதால், மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி அன்னபூரணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், அரசு ஊழியரை நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது என்பது விரைவான விசாரணை, நியாயம் பெறும் உரிமையைப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டு, அன்னபூரணிக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார்.
ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்களை நீண்டகாலம் பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், இடைநீக்க காலத்தில் எந்த பணியும் செய்யாமல் ஜீவனப்படியைப் பெறுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பயன்பாட்டிற்காக 60 ஆப்பிள் ஐபேட்!