தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலின் தற்போதைய நிலை குறித்து நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் வெளி்யிட்ட அறிவிப்பில், “சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகளவில் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், இது குறித்து மருத்துவ மற்றும் பொதுச் சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதில், நகர்ப்புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
எனவே, தற்போதுள்ள சூழ்நிலையையும், வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005இன் கீழ், கீழ்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
- சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும், முழு ஊரடங்கு ஏப்.26ஆம் தேதி (ஞாயிறு) காலை 6 மணி முதல் ஏப்.29ஆம் தேதி (புதன்) இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும்.
- சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு ஏப்.26ஆம் தேதி காலை 6 மணி முதல் ஏப்.28ஆம் தேதி இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் முழு ஊரடங்கில் எவை எவை செயல்படும் என்ற தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணையை தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டார்.