சென்னை சிஐடி நகரில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களிடம் உரையாடியபின் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் சித்திக் ஐஏஎஸ் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய சிறப்பு அலுவலர் சித்திக், "சென்னையில் கரோனா பரிசோதனைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுவருகின்றன. தற்போது கிட்டத்தட்ட 25 ஆயிரம் கரோனா நோயாளிகளில் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.
இரண்டாயிரத்து 710 பேர் கரோனா பாதுகாப்பு மையத்தில் உள்ளனர். 11 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கடந்தாண்டு சிறிய பாதிப்பை ஏற்படுத்திய கரோனா வைரஸ் (தீநுண்மி) தற்போது சுனாமி போன்ற பெரிய அலையாக வந்துகொண்டிருக்கிறது. அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்தப் பெரிய அலையை ஒழிக்க முடியும்.
மக்கள் பதற்றம் அடையாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு உறவினர்களை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சென்னையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வரும் 10 நாள்களில் இரண்டாயிரத்து 400 படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்திலும் ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
முதற்கட்டமாக உடனடியாக 250 படுக்கை வசதி, பின்னர் 250 படுக்கை வசதி என 500 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
சென்னையில் 12 ஸ்கிரீனிங் மையங்கள் உள்ள நிலையில் மேலும் ஒன்பது மையங்களை அதிகரிக்க உள்ளோம். கரோனா சுனாமியை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் மருத்துமனைகளும் போராட வேண்டும்.
தனியார் தனிமைப்படுத்தும் மையங்களுக்கான கட்டணங்களை அவர்களே நிர்ணயம் செய்துகொள்வார்கள். தற்போது படுக்கைகளே உடனடி தேவை என்பதால் தனியாருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. கோவின் செயலியில் உள்ள சிறு சிறு தொழில்நுட்பக் கோளாறுகள், இன்று மாலைக்குள் சரிசெய்யப்பட்டு இதுவரை எத்தனை பேர் பதிவுசெய்துள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்படும்.
கரோனா தடுப்பூசி போடுபவர்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க தங்களுடைய வீடுகளுக்கு அருகில் இருக்கும் மையங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பான தடுப்பூசிகளே. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
பேருந்தில் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை மக்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை. சென்னையில் 45 விழுக்காட்டினர் மட்டுமே பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் உடனடியாக ஒரு விதியைப் பின்பற்றுவது கடினம். அலுவலக நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்த்து ஒத்துழைக்க வேண்டும்.
கரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம்செய்யும் நடைமுறைக்காக ஊழியர்கள் யாராவது பணம் கேட்பது தொடர்பாகப் புகார் கிடைத்தால் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபடும் தேர்தல் முகவர்களுக்கு இன்று இரண்டாவது நாளாக கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. முகவர்கள் இரண்டு தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும், இல்லையெனில் 48 மணி நேரத்திற்கு முன்னதாக கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்" என்றார்.