தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் இன்று தொடக்கக்கல்வித் துறை இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நிர்வாகிகள் கூட்டமைப்பின் தலைவர் மார்ட்டின் கென்னடி, "தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு அம்மாணவர்கள் மாறுதலாகி செல்லும்பொழுது பள்ளிக்குச் செலுத்தவேண்டிய கட்டணம் செலுத்தாமல் சென்றுவிடுகின்றனர்.
இதனால் தாங்கள் பாதிக்கப்படுகிறோம். மேலும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை எண்களைப் பயன்படுத்தி மாணவர்களைச் சேர்க்கின்றனர். இதனை முறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைவைத்துள்ளோம்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2018-19ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான நிலுவைத் தொகை ரூ.60 கோடி வழங்க வேண்டும். மேலும் 2019-20ஆம் கல்வியாண்டில் அளிக்க வேண்டிய தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார்.
மேலும் கல்விச் சேவை வரியிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் தலா ரூ.20,000 நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.