சென்னை: கக்கனின் 41ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கக்கனின் திருவுருவப்படத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீமான், "தமிழ்நாடு ஆளுநரிடம் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள் இல்லை. அரசே எப்பொழுதாவது மக்களின் நலன் சார்ந்து செயல்படுகிறது. அப்பொழுது ஆளுநர் இடையூறாக இருந்தால் என்ன செய்வது? மக்கள் நலன் சார்ந்த எதையும் அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ மாட்டார் என்றால், எதற்கு ஆளுநர் பதவி?
அறிவை வளர்க்கும் கல்வியை கற்றுத்தரும் பள்ளிக்கூடம் கட்ட காசு இல்லை. ஆனால், பேனா சிலை கட்ட காசு ஏது?. நான் காசு கொடுத்து பள்ளிகளை சரி செய்ய வேண்டும் என்றால், அரசு எதற்கு இருக்கிறது?. இது எப்படி சேவையாக இருக்கும்?
மக்கள் பிரச்னையைப் பற்றி பேச முடியாதவர்கள்தான் வாட்ச் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கையில் கட்டி இருக்கும் கடிகாரம், காலில் போடும் செருப்பு இதெல்லாம் பிரச்னையா?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அப்போது, சீமானின் உறவினர் அருள்மொழிக்கு சீட்டு கொடுத்தது வாரிசு அரசியலா என செய்தியாளர் கேள்வி எழுப்பியதால், திடீரென கோபமடைந்த சீமான், செய்தியாளரை ஒருமையில் திட்டி, 'நல்ல மனநல மருத்துவரை பார்' என்றார்.
இதனால் சீமானுக்கும் செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால், செய்தியாளர் சந்திப்பில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'பொங்கல் தொகுப்பில் ரூ.5000 ரொக்கம், கரும்பு வழங்கிடுக' - இபிஎஸ் வலியுறுத்தல்