சசிகலாவுக்கு தொடர்புடைய 1,600 கோடி சொத்துகளை கடந்த ஆண்டு முடக்கிய வருமான வரித்துறையினர், தற்போது பினாமி சட்டத்தின்படி மேலும், 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஆகஸ்ட் 28ஆம் தேதி முடக்கினர். 2017ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையின் தொடர் நடவடிக்கையாக தற்போது முடக்கப்பட்ட 65 சொத்துகளில் போயஸ் தோட்டத்தில் உள்ள சொத்தும் உள்ளது. இந்த இடம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்துவந்த வேதா நிலையத்திற்கு அருகிலுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து சில மாதங்களில் சசிகலா வெளி வரவுள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா தங்குவதற்காக வேதா நிலையம் போன்று பிரமாண்ட வீட்டிற்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. வருமான வரித்துறையினர் இந்த சொத்துகளை முடக்கிய பிறகும் கூட கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், முடக்கப்பட்ட சொத்துகள் குறித்த பட்டியல் சிறையில் உள்ள சசிகலாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் முடக்கப்பட்ட ஒன்பது கிரவுண்ட் மற்றும் 860 சதுர அடி அளவு கொண்ட இடத்தில் வருமா வரித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் இந்த இடம் முடக்கப்பட்டதற்கான நோட்டீஸை அலுவலர்கள் அனுப்பியுள்ளனர்.
அந்த நோட்டீஸில், இந்த இடம் பினாமி சட்டத்தின்படி முடக்கப்பட்டுள்ளதாகவும், 90 நாட்களுக்குள் இந்த சொத்திற்கான ஆதாரங்களை வழங்க இறுதி அவகாசம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை வேறுயாரும் வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்படுகிறது. அதே வேளையில், கட்டுமானப் பணிகளை நிறுத்துவதற்கான எந்த உத்தரவும் அதில், இடம் பெறவில்லை.
சொத்து குறித்த ஆவணங்களை கொடுக்கப்பட்ட அவகாசத்திற்குள் சமர்பிக்க தவறினால் சட்டப்பூர்வமாக இந்த இடத்தை சீல் வைத்து கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் முடக்கப்பட்ட 65 சொத்துகளிலும் இந்த நோட்டீஸை வருமான வரித்துறையினர் ஒட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலாவிற்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!