சென்னை: மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயலர், தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலர் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு இன்று (நவ.18) மனு ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில், “நவம்பர் 2ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படத்தில் வன்னியர் சங்கம் மற்றும் அதன் தலைவராக இருந்து மறைந்த குரு, ஆகியோரை குறிக்கும் வகையில் காட்சிகளும், கதாபாத்திரங்களும் அமைத்து அவதூறு பரப்பி உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெயர் சர்ச்சை
பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய பெயர்களுடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், உதவி ஆய்வாளர் அந்தோணி சாமியின் பெயரை குருமூர்த்தி என மாற்றியதுடன், பின்னணியில் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை அமைத்துள்ளனர். படக்குழுவினரின் இந்தச் செயல் அறியாமல் நடந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.
படத்தை அங்கீகரிக்க கூடாது
என்னதான் படம் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கணவன், மனைவி அனுபவித்த சித்ரவதைகளை காட்டும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் தவறாக சித்தரிக்கும் நோக்கில் திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆகையால், எந்தவிதமான விருதுக்கோ? பாராட்டுக்கோ? இந்தப் படம் தகுதியானது இல்லை. ஜெய் பீம் படத்தை தேசிய விருது உள்பட எந்த விதமான விருதுக்கோ, அங்கீகாரத்திற்கோ மத்திய, மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்ததற்காக ரூ.5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ஏற்கனவே படக்குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'விஜய் வரிகட்டாமல் ஏமாற்றுகிறார், சூர்யா இரட்டை வேடம் போடுகிறார்'- கொதிக்கும் அர்ஜுன் சம்பத்!