சென்னை: செங்கல்பட்டு அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அதில், "பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணமான 50 ரூபாயைத் தவிர, கூடுதல் தொகையை மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது என கடந்த ஜூன் 18ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ள நிலையில், அதையும் மீறி, பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா 100 ரூபாய் வசூலித்துவருகிறார்.
கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால், இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கூடுதல் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சனை பணிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "மனுதாரர் முரளிதரன் அனுப்பியதாக பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடமோ, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலரிடமோ எந்த மனுவும் இல்லை. அதேசமயம், பெற்றோர் தரப்பிலிருந்து தலைமை ஆசிரியைக்கு எதிராகப் புகார் வந்திருந்தால் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவுசெய்த நீதிபதி கிருஷ்ணகுமார், தலைமை ஆசிரியை மீதான புகார் மனுவை பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் ஒரு வாரத்திற்குள் கொடுத்து, அதை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கையாகத் தாக்கல்செய்ய வேண்டும்.
மேலும் பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணம் 50 ரூபாயைத் தவிர கூடுதலாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தும்படி பள்ளி கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதையும் மீறி கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறி வழக்கை ஜூலை 14ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: ஒரு செங்கல்கூட இருக்கக் கூடாது' - வலையன் கண்மாய் வழக்கில் நீதிபதிகள் கண்டிப்பு