சென்னை: மிக்ஜாம், இந்த வார்த்தையை சென்னை மக்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டார்கள். அப்படி யாராலும் மறக்க முடியாத ஒரு ஆறா வடுவை கொடுத்துச் சென்றிருக்கிறது, இந்த மிக்ஜாம் புயல். இந்த மிக்ஜாம் புயல் சென்னை மக்களை மட்டும் புரட்டிப் போடவில்லை. சென்னையின் கடைக்கோடியில் உள்ள மக்களை இன்னும் பெரிய இன்னலுக்கு உள்ளாக்கிச் சென்றிருக்கிறது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்ட நிலையில், வடசென்னையின் நிலைமை சற்று கவலைக்கிடமான இடத்துக்கு தள்ளபட்டுள்ளது.
பெருவள்ளம்: மிக்ஜாம் புயலின்போது சென்னையில் பல பகுதிகள் பாதிப்படைந்து இருந்தாலும்கூட தென் சென்னை, மத்திய சென்னை போன்ற பகுதிகளில் வெள்ள நீர் விரைவாக வடிந்த நிலையில், அவர்களுக்கு பல நிவாரண உதவிகள் கிடைத்தன. ஆனால், வடசென்னையைப் பொறுத்தவரை மழை விட்டு மூன்று நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாமலும், எந்தவித நிவாரணப் பொருட்களோ அல்லது உதவியோ கிடைக்காமல் தவித்தனர். குறிப்பாக மணலி, ராயபுரம், கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் 6 நாட்கள் வரை மழை நீர் தேங்கி நின்ற அவலமும் வடசென்னையில் நிகழ்ந்தது.
எண்ணெய் கசிவு: மழை பாதிப்புகள் ஒரு பக்கம் என்றால், மழை வெள்ளத்தோடு மணலி பகுதியில் செயல்பட்டு வருகின்ற சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு மணலி, எண்ணூர் குப்பம், நெட்டுக்குப்பம், தாழம் குப்பம், திருவொற்றியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் எண்ணெய் கழிவானது, குடியிருப்பு பகுதி முதல் பெரும்பாலான பகுதிகளில் பரவத் தொடங்கியது.
இதன் காரணமாக அதிக அளவு துர்நாற்றம், எண்ணெய் பிசுபிசுப்பு என பல இன்னல்களுக்கு வடசென்னை மக்கள் உள்ளாக்கப்பட்டனர். இதனையடுத்து, எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவினை முழுமையாக அகற்றும் பணி தற்போது வரை நடைபெற்று வருகின்றன.
அமோனியா வாயுக்கசிவு: நேற்று நள்ளிரவு எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியானது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், மயக்கம், குமட்டல் என பல பிரச்னைகள் ஏற்பட்டன. கடுமையான மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சையும் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது.
பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஏற்கனவே இந்த எண்ணெய் கசிவு காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாகத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டு இருக்கும் வாயுக்கசிவால் அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர். காற்றில் கலந்துள்ள வாயுவால் மக்களுக்கு எந்தவித பிரச்னைகளும் இல்லை என அதிகாரிகளும் மருத்துவர்களும், தெரிவித்தாலும்கூட, வரும் காலத்தில் ஏதும் இதனால் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்திலே மக்கள் உள்ளனர்.
பாய்லர் வெடிப்பு: நேற்று இரவு நடந்த சம்பவத்தில் இருந்து வடசென்னை மக்கள் மீள்வதற்குள் அடுத்ததாக திடுக்கிடும் சம்பவமாக நிகழ்ந்தது, இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடிப்பு சம்பவம். இதில் மேலும் ஒரு துரதிர்ஷ்டமான செய்தி, ஒருவர் உயிரிழப்பு என்பது. வழக்கமான நாளாகத்தான் இருக்கும் என பணிக்கு சென்றவர்கள் அனைவருமே அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வரும் அளவிற்கு இருந்தது, பாய்லர் டேங்க் வெடித்த சத்தம்.
இப்படி மழை, வெள்ளம், எண்ணெய் கழிவு, அமோனியா வாயுக்கசிவு, வெடி விபத்து என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் வடசென்னை மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர். பொதுவாக, சென்னையைப் பொறுத்தவரை, சுனாமி மற்றும் 2015 சென்னை பெருவெள்ள நிகழ்வுகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இனி இந்த பட்டியலில் வடசென்னை மக்கள் டிசம்பர் மாதத்தை மறக்க மாட்டார்கள். அப்படிபட்ட ஒரு மாதமாக அமைந்துள்ளது இந்த ஆண்டு டிசம்பர் மாதம்.
இது போன்ற தொடர் பாதிப்புகள் குறித்து தென்னிந்திய மீனவ சங்கத் தலைவர் பாரதியிடம் கேட்டபோது, “வட சென்னையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். குறிப்பாக திருவொற்றியூர், மணலி, எண்ணூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தனியார் தொழிற்சாலைகள், எண்ணெய் நிறுவனங்கள், உர ஆலைகள் இருப்பதால், இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
மேலும் இப்பொழுது வடசென்னை இருக்கிற சூழலுக்கு அதிகாரிகளை மட்டும் குறை சொல்வதை எடுத்துக் கொள்ள முடியாது. இதற்கு முன்பு வட சென்னையில் வாழ்ந்த பூர்வகுடிமக்களும்தான் தற்பொழுது நடைபெறும் சம்பவங்களுக்கு காரணம். மேலும், வடசென்னை பகுதி என்றால் மக்கள் அதிகமாக அடர்த்தியாக வாழக்கூடிய ஒரு இடம். ஆனால், இந்த பகுதிகளில் முறையான தண்ணீர் வசதியோ அல்லது மக்களுக்கான வாழ்வாதாரமும் குறைவாகத்தான் உள்ளது.
குறிப்பாக, நேற்று நடந்த சம்பவம் கூட அவர்களுக்கு பழகிப்போன ஒரு வாயு என்பதால், பெரிய அளவில் அவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இதே நிலை நீடித்தால் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு வரும் காலங்களில் இதனுடைய வீரியம் என்பது அதிகமாக இருக்கும். அதனால், உடனடியாக அரசு இந்தப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
வாயுக்கசிவு ஏற்பட்ட உடனே, அனைத்து ஆலைகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் இப்பொழுது கூறுகிறார்கள். ஆனால், இந்த ஆய்வினை அவர்கள் முன்னதாகவே மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்படி மேற்கொண்டு இருந்தால், ஏற்கனவே எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு, அதைத்தொடர்ந்து ஏற்பட்டிருக்கின்ற இந்த வாயுக்கசிவு, அதேபோல தண்டையார்பேட்டையில் இன்று ஏற்பட்ட பாய்லர் விபத்து ஆகியவை நடந்திருக்காது” என தெரிவித்தார்.