சென்னை: துரைப்பாக்கத்தில் வசித்து வந்தவர், அகிலன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அகிலன், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் சென்னை திரும்பிய அகிலன், குரோம்பேட்டை இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் இருந்து தனது பைக்கை எடுத்து விட்டு ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், அவர் முன்பு வேகமாக வந்து அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த நபர்கள், அகிலன் அணிந்திருந்த 2 சவரன் தங்கச்செயின் மற்றும் அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த அகிலனுக்கு, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வந்து புகார் அளிக்கும்படி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு அகிலன் தகவல் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த குரோம்பேட்டை காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆராய முயற்சி செய்தனர். ஆனால், காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் எதுவும் வேலை செய்யாமலும், பழுதடைந்த நிலையிலும் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைத் தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலி தங்கம் விற்க முயன்ற வடமாநில நபர்கள் கைது: அம்பலமானது எப்படி?