தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. முதலமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்ட ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். புதிய அமைச்சரவையில் அனைவருமே எதிர்பார்த்தது உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன இலாகா என்பதைத்தான்.
ஆனால், அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்களும், இளைஞரணி நிர்வாகிகளும், எதற்காக உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்ற கேள்வியை முன்வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சமயத்தில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டாம். ஏற்கனவே அவருக்கு சீட் கொடுத்ததற்கே, உதயநிதியின் அனுபவம் என்ன, திமுக குடும்ப அரசியல் செய்கிறது போன்ற வாதங்கள் எழுந்தன. எனவே அவருக்கு இந்த அமைச்சரவையில் இடம் கொடுத்தால் முதல்முதலாக தன் தலைமையிலான அமைந்த ஆட்சிக்கு ஆரம்பமே அவப்பெயர் வந்துவிடும்.
சிறிய அளவிலான அவப்பெயரைக்கூட சம்பாதித்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், இன்னும் 6 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும். அதில் சென்னை மேயராக உதயநிதி களமிறங்கி வென்று அரசு நிர்வாக முறையை கையாள அவர் அங்கிருந்து பாடம் கற்கத் தொடங்கட்டும்.
தன்னைப் போலவே மேயரிலிருந்து தொடங்கி படிப்படியாக உதயநிதி, மாண்புமிகு நாற்காலிக்கு வரட்டும். அப்போதுதான் அவர் மீதும் மக்களுக்கு மேலும் நம்பிக்கை பிறக்கும் என ஸ்டாலின் நினைப்பதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.