தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அவசர செயற்குழு கூட்டம் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அனுமதி தராததால் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அடுக்குமாடி கட்டிடம் 1 நுழைவாயில் முன்பாக தரையில் அமர்ந்து செயற்குழுவை நடத்தினர்.
இது குறித்து பேசிய அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை காரணம் காட்டி மருத்துவர் பணியிடங்களை மேலும் அரசு குறைகிறது. எனவே இதனைத் திரும்பப் பெற வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கு முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வினை வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்திட வேண்டும்.
பட்ட மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவ பிரிவில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அப்போது அரசு எங்கள் கோரிக்கையை ஆறு வாரத்திற்குள் நிறைவேற்றித் தருவதாக அறிவித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை அதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.அதனைத் தொடர்ந்து இன்று அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவமனை வளாகத்தில் செயற்குழுக் கூட்டத்தை நடத்தினோம் என்றார்.