சென்னையில் இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் இன்று (மார்ச் 24) நடைபெற்ற உயர்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் சீதாராம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் தலைவர் சீதாராம் கூறுகையில், உயர்கல்வியில் கொண்டு வரப்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடினோம்.
தேசிய கல்வி கொள்கையின் மூலம் உயர் கல்வியில் தரத்தை உயர்த்துவது தான் முதன்மை நோக்கமாக அமைந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான 2023-24 ஆம் ஆண்டிற்காக கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசியக்கல்விக் கொள்கை அடிப்படையில் கல்லூரிகளை தொடங்குவதற்கும், மாற்றங்களை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில்நுட்ப கல்விக்கான பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 13 மாெழிகளில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி வட்டார மொழிகளில் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம்.
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கம். ஊரக மட்டும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளை தொழில் நிறுவனங்கள் உடன் சேர்ந்து தொடர்பு ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மாணவர்கள் சேராத பொறியியல் கல்லூரிகள் தங்களுக்கு மூடுவதற்கு அனுமதி கேட்டால் வழங்குவோம். தமிழ்நாட்டில் உள்ள சில தரமற்ற கல்லூரிகளுக்கு அனுமதி குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க முடியும் உடனடியாக முடிவெடுக்க முடியாது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவில் நிலங்களை அறநிலையத்துறை ஆக்கிரமித்துள்ளதா? - உயர் நீதிமன்றம் கேள்வி!