தமிழ்நாட்டில் குடியிருப்புகளுக்கான குடிநீர் இணைப்பிற்கு, கிராம ஊராட்சி அமைப்பு குடிநீர் கட்டணம் விதிக்கின்றது. தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு வைப்புத் தொகையாக 1000 வசூலிக்கப்படுவதுடன், மாதக் கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதன்படி 2018 - 2019ஆம் ஆண்டின் குடிநீர் கட்டணமாக 87.19 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த பல மாதங்களாக நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள 184 நகர்ப்புற பகுதிகளில், தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டதாக அரசு அறிவித்தது. மேலும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் பொதுமக்களுக்கான சேவையை செய்ய தவறிய தமிழ்நாடு அரசு, இந்தாண்டுக்கான குடிநீர் வரியை பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என்கின்றார் சமூக ஆர்வலர் ரவீந்திரநாத்.
இதுகுறித்து அவர் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'சுற்றுச்சூழல் மாசு அடையாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, குடிநீரை முறையாக வழங்கும் வகையில் தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கைகள் எடுப்பது அரசின் முக்கியக் கடமையாகும். இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்காதது மனித உரிமை மீறல் என்பதால், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குடிநீரின்றி பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம், குடிநீர் வரியை வசூலிக்கக் கூடாது' என்றார்.