சென்னை: கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கிராமப்புறம், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களையும் கடுமையாக பாதிக்கின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரை நீட் தேர்வுக்கு தயாராகி தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து விடுகின்றனர். அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகுவதில்லை.
விவரம் இல்லை
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் சூழ்நிலையில், தேசிய அளவில் மாநிலம் வாரியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கிராமப்புற மாணவர்களின் விவரம் உள்ளனவா? எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதற்கு மாநிலம் வாரியாக கிராமப்புற மாணவர்களின் விவரம் தங்களிடம் எதுவும் இல்லை என நீட் தேர்வை நடத்துகின்ற தேசிய தேர்வு முகமை பதில் அளித்துள்ளது.
இந்தியா பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சியை கண்டிருந்தாலும் இன்றளவிலும் நாடு முழுவதும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமப்புறங்கள் ஏராளமாக உள்ளன. அதுபோன்ற கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கு தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி கிடைப்பது என்பது மிக சவாலாக அமைந்து விடுகிறது. இத்தகைய நிலையில் மருத்துவப் படிப்பிற்கு தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படும் போது கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேருகின்ற வாய்ப்பை தவற விடுகின்றனர்.
தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வை பொருத்த அளவில் அதன் தாக்கங்களை பல்வேறு நிலைகளில் ஆராய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கும் சூழலில் நீட் தேர்விற்கான விண்ணப்பத்தின் போது, கிராமம், நகரப்புறம் போன்ற பகுதிகள் கேட்கப்படுகின்றன. ஆனால் தற்பொழுது அது போன்ற தகவல்கள் இல்லை என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
ஒருமுறை மட்டும் நீட் தேர்வினை எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களின் விவரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தேசிய மருத்துவ ஆணையம், நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புகளின் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர் எனவும் தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது.
இதையும் படிங்க: மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை: மு.க.ஸ்டாலின்