அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்து அதனை நடைமுறையும் படுத்தியது.
இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசு ஆகம விதிகளை மீறிவிட்டதாக, அவர்கள் வாதத்தை முன் வைக்கின்றனர்.
இந்நிலையில், ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் பேட்டி எடுத்திருந்தார். தற்போது அந்த காணொலி வைரல் ஆகி வருகிறது.
அந்தப் பேட்டியில், கோயில்களை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஜக்கியின் வாதம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.
அப்போது, 'இங்கு ஆகம முறை இருக்கிறது. அதனடிப்படையில் யார் யார் பூஜை செய்ய வேண்டும் என்ற முறை இருக்கிறது. அனைவரும் பூஜை செய்யலாம் எனக் கூறப்படவில்லை' என ரங்கராஜ் பாண்டே கூறினார்.
இதற்குப் பதிலளித்த ஜக்கி வாசுதேவ், 'அப்படியெல்லாம் இல்லை. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம். நெஞ்சில் பக்தியும், முறையான பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும், அர்ச்சகர் ஆகலாம்.
குறிப்பிட்ட சாதியினர் தான் அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்பது வரலாற்றில் இடையில் வந்த பிரச்னை. பயிற்சி முடித்து யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்.
அடுத்த தலைமுறை இதைத்தான் எதிர்பார்க்கிறது. இந்த முறையில் போனால்தான் அடுத்த தலைமுறையில் கோயில்கள் இருக்கும். பழைய கதையை சொல்லிக்கொண்டிருந்தால் அவர்கள் மதிக்கமாட்டார்கள்'' என்றார்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஜக்கி வாசுதேவ் கூறியதற்குத் தற்போது பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.