நாடு முழுவதும் கரோனா மூன்றாம் அலை, ஒமைக்ரான் தொற்றுப் பரவல் வேகமாகப் பரவ தொடங்கியதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் எடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மனரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கரோனா தொற்று குறைந்ததும் விரைந்து பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்க வேண்டும் என பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கரோனா தொற்று குறையத்தொடங்கிய நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.
அதன்படி, கடந்தவாரம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகப்பை இல்லா நாள் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. புத்தகங்கள் எடுத்துச் செல்லாமல் அனுபவம் மூலம் வாழ்க்கைக் கல்வி பயிலும் இந்தத் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மாணவர்களுக்கு மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் பற்றிப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. மேலும், மாணவர்களுக்குச் சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள் வழங்க 1.2 கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியது.
இந்நிலையில், பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறை அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, நீண்ட நாட்களுக்குப்பிறகு பள்ளிகள் தற்போது தான் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை சரி செய்யவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. எனவே, வரும் 26ஆம் தேதி அன்று நடைபெற இருந்த புத்தகப்பை இல்லா தினம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் திருத்தம்