சென்னை: கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறந்த விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறையை கண்டிக்கும் வகையில் 18ஆம் தேதி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தனர்.
அப்பொழுது தமிழ்நாட்டில் இயங்கி வந்த 987 தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்திருந்தது மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் பெற்ற தகவலின் மூலம் தெரியவந்தது. அந்தப் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், 18ஆம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் சமர்ப்பித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை வேலை நாள் இழப்பை, சனிக்கிழமையில் வகுப்பு நடத்துவதன் மூலம் ஈடுசெய்து கொள்வோம் என்று பள்ளிகள் கூறியுள்ளதை ஏற்று, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குரூப் 1 பதவியில் 92 காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு