சென்னை: 10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 100 இளங்கலை மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற புதிய நடைமுறை, வரும் 2025 - 26ஆம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும் எனத் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்பில் புதிய மருத்துவக்கல்லூரிகளை உருவாக்குவதற்கான விதிமுறைகளை 2023 ஆகஸ்ட் 16ஆம் தேதி தேசிய அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், "தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல் படி ஏற்கனவே உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இருக்க வேண்டிய வசதிகளையும், புதியதாகத் துவக்கப்பட உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இருக்க வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், மருத்துவப் பிரிவுகள், மருத்துவ ஆய்வகம், படுக்கை வசதிகள், தினமும் நோயாளிகளின் வருகை, அறுவை சிகிச்சை குறித்த விபரங்களும் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விதிமுறைகளின் நோக்கமாக ஆண்டுதோறும் MBBS மாணவர் சேர்க்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ நிறுவனத்தில் (சுயநிதிப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் கல்லூரி) குறைந்தபட்ச தங்குமிட வசதிகள், கற்பித்தல் தொடர்புடைய மருத்துவமனைகள், கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவக் கல்லூரி துறைகளில் உள்ள உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் இடம் பெறும்.
இந்த விதிமுறைகள், 2024-25 கல்வியாண்டு முதல் நிறுவப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பொருந்தும். புதிய இளங்கலை மருத்துவக் கல்விக் கல்லூரிகளை நிறுவுவதற்கான விண்ணப்பங்கள் 50, 100, 150 இடங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
2024 - 2025ஆம் கல்வியாண்டிலிருந்து அனுமதிக்கப்பட்ட, MBBS மாணவர்களின் சேர்க்கையைத் தொடரத் தகுதிபெறும். 2024 - 2025ஆம் ஆண்டிலிருந்து 150 எம்.பி.பி.எஸ் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரும் கல்லூரிகள் சேர்க்கைக்கான அனைத்து விதிமுறைகளையும் நிறைவு செய்திருக்க வேண்டும். 2023 - 2024ஆம் கல்வியாண்டுக்கு முன்னர் 200 அல்லது 250 இடங்களைப் பெறுவதற்கு விண்ணப்பித்தும், அதைப் பெறத் தவறிய கல்லூரிகள், தங்கள் முந்தைய விண்ணப்பத்தில் ஒரு முறை மட்டும் 2024 - 2025ஆம் கல்வியாண்டில் துவங்குவதற்குக் கேட்கலாம்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு மருத்துவக் கல்லூரியில் 100 MBBS இடங்கள் என்ற விகிதத்தைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியும் இளநிலை மருத்துவப் படிப்பில், உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல், நோயியல், மைக்ரோ பயோலாஜி, பார்மாகோலோஜி, தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல், கம்யூனிட்டி மருத்துவம், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மனநலம், தோல் நோய், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், ரேடியோ-நோயறிதல், கண் மருத்துவம், குடலியல், மயக்கவியல், பல் மருத்துவம், ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பிரிவுகளைத் துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அதில், அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற விகிதத்தை மருத்துவக் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் 36, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி ஒன்றும், சுயநிதிக் கல்லூரிகள் 21, சுயாட்சிக் கல்லூரிகள் (Deemed Universities) 13 சேர்ந்து ஆக 71 மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. 71 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவ இடங்கள் 11,475 ஆக இருக்கிறது. பல்மருத்துவ இடங்கள் 2150 ஆக உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை சுமார் 8 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மத்திய அரசிற்குக் கடிதம் எழுதினர்.
தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் புதிதாகத் துவங்கப்பட்ட காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாமல் உள்ளன. அந்த மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைத் துவக்க, தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடமும், தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரி உள்ளது. மேலும் பிரதமர் மோடி மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். அதனையும் செயல்படுத்த வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 இளங்கலை மருத்துவ இடங்கள் என்ற அடிப்படையில், மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஆகஸ்ட் 16ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், வரும் 2025-26ஆம் கல்வி ஆண்டிலிருந்து புதிய அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனத் தேசிய மருத்துவ ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: விளக்கம் கேட்டு மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்..! சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டத் தமிழக அரசுத் திட்டம்!